டி20 உலகக்கோப்பை 2026 வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் கோப்பையுடன் அகமதாபாத் ஹனுமான் கோவிலுக்குச் சென்றது பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கீர்த்தி ஆசாத், இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 1983-ல் கபில் தேவ் தலைமையிலான அணி அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியதாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த வெற்றி ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தமானது அல்ல; சிராஜ் ஏன் மசூதிக்கும், சஞ்சு ஏன் தேவாலயத்திற்கும் கோப்பையை எடுத்துச் செல்லவில்லை?” எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்திய அணியைப் பற்றி வெட்கப்படுவதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி ஆசாத்தின் இந்த விமர்சனத்திற்கு இந்திய வீரர் இஷான் கிஷன் மற்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளனர். “உலகக்கோப்பை வென்ற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நல்ல கேள்விகளைக் கேளுங்கள்” என இஷான் கிஷன் நழுவிய நிலையில், ஹர்பஜன் சிங் மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

“>

“யாராவது கோவிலுக்குச் செல்வதை அரசியலாக்குவது அபத்தமானது; ஒரு முன்னாள் வீரரிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வருவது வருத்தமளிக்கிறது. இது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம், இதில் அரசியல் புகுத்தப்படக்கூடாது” என ஹர்பஜன் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். நாடு முழுவதும் வெற்றி விழா கொண்டாடப்படும் வேளையில், மத ரீதியான இந்த விவாதம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.