வறுமை ஒருபோதும் திறமைக்குத் தடையாக இருக்காது என்பதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நாவ்யா மீனா நிரூபித்துக் காட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாவ்யா மீனா 99.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜெய்ப்பூர் மற்றும் சீகர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவியின் குடும்பச் சூழல் மிகவும் ஏழ்மையானது.

தந்தை குஜராத்தில் கூலி வேலை செய்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஈட்டி வரும் நிலையில், வீட்டில் உள்ள 14 ஆடுகளை மேய்த்துக் கொண்டே இந்தச் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ளார் நாவ்யா.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் புத்தகப்பையை வைத்துவிட்டு, ஆடுகளை மேய்க்கக் காட்டுக்கு அழைத்துச் செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போதே, கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்து இந்த அசாத்திய வெற்றியைப் பெற்றுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகி நாட்டுக்குச் சேவை செய்வதே தனது லட்சியம் என நாவ்யா மீனா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சாலை வசதி கூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து கொண்டு, ஆடு மேய்த்துக் கொண்டே மாநில அளவில் முதலிடம் பிடித்த இந்த மாணவி, இன்று பல கோடி இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக மாறியுள்ளார்.