ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெற்றோரின் விருப்பத்தை மீறிக் காதலித்துத் திருமணம் செய்த மகளைத் தந்தையே தலையணையால் அமுக்கிக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தக் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது மாச்சர்லா பகுதியைச் சேர்ந்த வியாபாரி சந்திர சீனு. இவருடைய மகள் சவுடேஸ்வரி (22), நாகராஜ் என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோர் சவுடேஸ்வரிக்கு அரசு ஆசிரியர் ஒருவருடன் திருமணம் நிச்சயித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலன் நாகராஜைத் திருமணம் செய்துகொண்டார்.
தனது மகளைக் காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என்றும் சந்திர சீனு போலீஸில் புகாரளித்தார். நாகராஜின் நண்பர் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த போலீஸார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், “நான் கட்டிய துணியுடனும், காதில் இருந்த கம்மலைக் கூட கழற்றி வைத்துவிட்டுத்தான் வந்தேன்” எனச் சவுடேஸ்வரி கண்ணீருடன் கூறியும் போலீஸார் அதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை.
“ஐந்து நாட்கள் தந்தையுடன் தங்கிவிட்டு, அதன் பிறகு கணவர் வீட்டிற்குச் செல்லலாம்” எனப் போலீஸார் வற்புறுத்தியதன் பேரில், சவுடேஸ்வரி தந்தையுடன் சென்றார். ஆனால், கடந்த மாதம் 19-ஆம் தேதி சவுடேஸ்வரி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சவுடேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாகத் தந்தை நாடகமாடினார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையணையால் அமுக்கிக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து சந்திர சீனுவிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், குடும்பக் கௌரவத்திற்காகத் மகளைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையை மறைக்க சந்திர சீனுவிடம் பெரும் தொகையைப் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, ஒரு காவல்துறை அதிகாரி அவருக்கு உதவியது விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அந்த அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கௌரவக் கொலைக்குக் காவல்துறையே உடந்தையாக இருந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
