உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் தம்புரில், ஆறு வயது சிறுமி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவிகா ராஜ்புத் என்ற சிறுமி, திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகி கோயில் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஐந்து முதல் ஆறு நாய்கள் திடீரென அவரைச் சூழ்ந்து தாக்கியுள்ளன.

மேலும் சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து, நாய்களை விரட்டியடித்து சிறுமியை மீட்டனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“>

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சிறுமி காயங்களிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த போதிலும், பிஜ்னூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அட்டகாசத்தால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் நாய்க்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தெருநாய்களைப் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.