ஹைதராபாத்தில் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸ் மெட்ரோ நிலையம் அருகே வசித்து வரும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சினிமா படப்பிடிப்பு மற்றும் நிகழ்வு மேலாண்மைத் துறையில் சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணிடம் பழகிய நபர் ஒருவர், சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரை செகந்திராபாத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரும் அவரது நண்பரும் சேர்ந்து, அந்தப் பெண்ணை இரண்டு நாட்கள் சிறைவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் பின்னர் வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது உடலில் காயங்கள் இருப்பதைக்கண்ட தோழி, அவரை உடனடியாக காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவப் பரிசோதனையின்போது நடந்த கொடூரத்தை அந்தப் பெண் கூற, அதிர்ச்சியடைந்த அவரது தோழி ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அந்த இரு நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சினிமா வாய்ப்பு என்ற பெயரில் பெண்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.