பெங்களூருவில் சினிமா மேக்கப் கலைஞரை மிரட்டி பணம் பறித்த புகாரில், பேராசிரியர், போலீஸ் அதிகாரி எனப் பல வேடங்களில் வலம் வந்த சந்திரேகவுடா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் மகளுடன் தனியாக வசித்து வரும் சினிமா மேக்கப் கலைஞர் (43) அளித்த புகாரில் கூறியதாவது, கடந்த 2021-ம் ஆண்டு சந்திரேகவுடா அறிமுகமானதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னை ராமநகர் கல்லூரியில் பேராசிரியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட சந்திரேகவுடா, அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகி உல்லாசமாக இருந்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்த சந்திரேகவுடா, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் வரை பறித்துள்ளார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து சந்திரேகவுடாவைக் கைது செய்த போலீஸார், அவரது பின்னணியை ஆராய்ந்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது இவர் ராமநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்துள்ளார். இது தவிர, தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்றும், பத்திரிகையாளர் என்றும் கூறி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
போலீஸ், பத்திரிகையாளர் மற்றும் நீதிபதி எனப் பல போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசை வார்த்தைகளைக் கூறுவதில் கில்லாடியான சந்திரேகவுடா, பல பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது செல்போனை ஆய்வு செய்ததில், ஏராளமான பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சில பெண்களின் ஆதார் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த மோசடி மன்னன் பின்னால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
