சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி ஜியாங் யுயெக்வின் (Jiang Yueqin), தற்போது இணையத்தின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளார். பொதுவாக முதியவர்கள் அதிகாலையில் எழுந்து பத்திய உணவுகளை உண்பார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால், ஜியாங் பாட்டியின் தினசரி வழக்கம் முற்றிலும் மாறுபட்டது. இவர் நள்ளிரவு 2 மணி வரை விழித்திருந்து தொலைக்காட்சி பார்க்கிறார், பின்னர் காலை 10 மணிக்குத் தான் நித்திரையில் இருந்து எழுகிறார். எழுந்தவுடன் ஒரு ஸ்ட்ராங்கான ‘கிரீன் டீ’யுடன் தனது நாளைத் தொடங்கும் இவர், இரவு நேரங்களில் பிஸ்கட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை விரும்பி உண்கிறார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அவரை வேலை செய்ய விடாமல் தடுத்ததால், பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் இந்த வழக்கத்திற்கு அவர் மாறியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 101 வயதிலும் அவருக்கு ஒரு பல் கூட விழவில்லை; செயற்கைப் பற்கள் (Dentures) இன்றி எதையும் கடித்துச் சாப்பிடுகிறார். நல்ல உறக்கம், சீரான கிரீன் டீ மற்றும் எல்லாவற்றையும் விட எதற்கும் கோபப்படாத ‘அமைதியான மனநிலை’ தான் தனது தாயின் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் என அவரது மகள் பெருமிதத்துடன் கூறுகிறார். “மனசுல வன்மம் இல்லாம நிம்மதியா இருந்தா 100 வருஷம் வாழலாம்” என்பதற்கு இந்தப் பாட்டியே ஒரு சிறந்த உதாரணம்.
