சிவமொக்கா மாவட்டத்தில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் ரமணா நாயக். இவருக்கு ஸ்ருதி (வயது 38) என்ற மனைவியும், பூர்விகா (வயது 12) என்ற மகளும் உள்ளனர். நேற்று இரவு பணிக்காக மருத்துவமனைக்குச் சென்ற ரமணா, இன்று காலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். பலமுறை வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியும், மனைவியும் மகளும் கதவைத் திறக்கவில்லை. செல்பேசியில் தொடர்பு கொண்டதும் பதிலளிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ரமணா, அருகிலுள்ள அண்டை வீட்டார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது, மகள் பூர்விகா வீட்டில் ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், மனைவி ஸ்ருதி மற்றொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஸ்ருதி, தனது மகளை அடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஸ்ருதி மனநல சிகிச்சை எடுத்துவருவதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
