மும்பையின் புகழ்பெற்ற தாராவி பகுதிக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி வாழ்ந்த அனுபவத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய வீடியோ பதிவர் பீட் இசட், இந்திய சமூகத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். “இந்தியாவின் மிகவும் கொடிய சேரியில் நான் உயிர்வாழ முயற்சித்தேன்” என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், தாராவியின் நெரிசலான வீதிகள், குறுகிய வழிகள் மற்றும் இடம் குறைந்த குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் பீட்டுடன் ‘ஆயுஷி’ என்ற இந்தியப் பெண் தோன்றுகிறார். “நான் பீட்டிற்காக இந்த சவாலைச் செய்கிறேன், ஆனால் எனக்கும் பயமாக இருக்கிறது” என்று கூறுகிறார். இதற்கு பீட், “இதற்கு நான் உங்களுக்கு பணம் கொடுத்தேன்” என பதிலளிக்கிறார். ஆயுஷி இதற்கு உடனே “இல்லை, நிச்சயமாக இல்லை” என மறுப்பதையும் காணலாம்.
View this post on Instagram
பீட் தாராவியில் மூன்று நாட்கள் தங்கி, அங்குள்ள குடியிருப்புகளை அனுபவிக்கிறார். அவர் வெளியிட்ட காணொளியில், “இங்கு நடப்பதே சிரமம், இது மிகவும் நெரிசலாக இருக்கிறது” என தெரிவித்தார். அந்த பகுதியில் வாழும் ஒரு இந்தியப் பெண், பீட்டுக்கு தன் வீட்டை காட்டுகிறார். குறுகிய இடத்தில் ஒரு குடும்பம் எவ்வாறு வசிக்கிறது என்பதைப் பார்த்து பீட் ஆச்சரியத்தில் உறைகிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. சிலர் இதை நகர்ப்புற வறுமையை வெளிக்கொணரும் ஒரு உணர்வுப்பூர்வமான முயற்சி என பாராட்டினர். ஆனால், பலரும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் வறுமையை பரபரப்பாக காட்டுகிறார்கள் என்றும், ஒருதலைப்பட்சமான பார்வையை முன்வைக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இந்தியாவின் வண்ணமயமான பண்பாடுகளையும், வளர்ச்சியையும் புறக்கணித்து, வறுமை மட்டுமே வெளிக்காட்டப்படுவதாக சமூக ஊடக பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
