கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி‌ வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களாக 80 யானைகளுக்கு மேல் சுற்றி திரிகின்றனர். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி போன்ற எஸ்டேட்டுகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

அங்கு யானைகள் குட்டி யானைகளுடன் வலம் வருவது வழக்கம். குறிப்பாக பருவ மழை காலங்களில் வலசை பாதை வழியாக ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது.இதனால் வனப்பகுதியில் உள்ள இலைதழை போன்றவை அழுகி விடுவதால் யானைகள் உணவு தேடி இடம்பெயருகிறது.

இதனால் யானைகள் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக காடுகளை விட்டு சமவெளி பகுதியில் உணவு தேடி செல்கிறது. அந்த வகையில் வலசை பாதைகளில் செல்லும் யானைகள் தங்களுக்கு பிடித்தமான மாற்று உணவினை பார்த்தால் அதனை விரும்பி உண்கின்றனர்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடீஸ் தோட்டப் பகுதியில் ஒரு காட்டு யானை குட்டி யானையுடன்  வலம் வந்தது. அது அங்கிருந்த தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியின் அருகே ஒரு பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை பார்த்தது உடனடியாக அதன் அருகே சென்றது.

பின்பு மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை பறித்து தனது கால்களால் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து பலாச்சுளைகளை தனது குட்டிக்கு கொடுத்து தானும் உண்டு மகிழ்ந்தது.

இதனை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.