வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முக்கிய அரசியல் முடிவை எடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திமுகவை தோற்கடிக்க பொதுவான நோக்கமுள்ள கட்சிகள் ஒன்று சேர வேண்டும். இந்த ஒத்த நோக்கில் நாம் தமிழர் கட்சி (நாதக), தமிழக வெற்றி கழகம் (தவெக) போன்ற கட்சிகளும் அடங்கும்” என குறிப்பிட்டார்.
மேலும், “நாம் யாரையும் விலக்கவில்லை. விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி – இருவரும் திமுக எதிரிகளே. அவர்களுடன் கூட்டணி அமைக்க எதிர்மறை எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் இதுவரை தவெகவுடன் நேரடியாக எந்தவொரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
இபிஎஸ் அளித்த இந்தப் பேட்டி, தமிழக அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்து வருகிறது. விஜய் மற்றும் சீமான் என்ன பதில் அளிக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் அரசியல் சூழ்நிலையை வடிவமைக்கும் முக்கிய கட்டமாக இச்செய்தி பார்க்கப்படுகிறது.
