நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரி, சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், நடிகை விஜயலட்சுமி “சீமானுடன் பேசி தீர்வு காண தயாரில்லை” எனத் தெளிவாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விஜயலட்சுமி தரப்புக்கு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேசமயம், சீமான் மீது தொடரப்பட்டுள்ள புலன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டது.

ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த விசாரணைகளில், “புதிய அரசு பதவி ஏற்ற பிறகு தான் வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டது. இதே புகார் நடிகையால் ஏற்கெனவே மூன்று முறை திரும்பப்பெறப்பட்டுள்ளது” என சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சமரசம் செய்ய எந்தவிதமான யோசனையும் இல்லை என “விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையும் குறிப்பிடத்தக்கது. தற்போது, வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விஜயலட்சுமி தரப்பின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.