முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேற்று  காலை வழக்கம்போல் தனது இல்லத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அவரை சென்னை தெனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.

அங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஓய்வெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனையிலிருந்தே தனது அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளை அவர் தொடர்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதால் எதுவும் கவலையில்லையெனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, திமுகவினரும், பொதுமக்களும்  சமூக ஊடகங்களில் முதல்வரின் உடல்நலம் சிறக்க பிரார்த்தனைகள் தெரிவித்து வருகின்றனர்.