மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருக்கும் சினேகா (வயது 32) நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணித்த போது, ஆட்டோவை தாறுமாறாக ஓட்டியதை பற்றி டிரைவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சினேகாவுக்கும், ஆட்டோ டிரைவர் பிரசாதுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், சினேகா ஆட்டோவின் சாவியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் தகராறில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கியதாக தெரிகிறது.

சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாலும், மோதல் தொடர்ந்தது. தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, சினேகா அளித்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்த போலீசார், அதே நேரத்தில் பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் சினேகாவுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது