பாம்புகளைப் பார்த்தாலே மக்கள் திகைத்து ஓடும் நிலையில், வெளிநாடுகளில் சிலர் அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்த்து, குழந்தையைப் போல பராமரிப்பது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையத்தில் பரப்பாகின்றன. இவ்வகையில், ஒரு மனிதன் பெரிய மலைப்பாம்பை குளிப்பாட்டும் விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வைரலான இந்த வீடியோவில், பல அடி நீளமும், கனமும் கொண்ட மலைப்பாம்ப்பை உரிமையாளர் தன் கைகளால் தடவி, துணியால் சோப்பு தேய்த்து குளிப்பாட்டுகிறார். பளபளப்பாகத் தோன்றும் அந்த பாம்பு, முழுவதும் குளித்து கொண்டு இருந்தபோது எந்த அசைவும் இன்றி அமைதியாக படுத்திருந்தது. மனிதனைத் தாக்கும் எந்த நோக்கமும் இல்லாமல், கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் உரிமையாளர் சோப்பு பூசுவதையும் அது அமைதியாக ஏற்றுக் கொள்வதும் காட்சியில் பதிவாகியுள்ளது.

 

இந்த வீடியோ Instagram-இல் phriie_putranaja28 என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வெளியான சில நாட்களிலேயே 3.5 மில்லியன் பார்வைகளையும், 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. பலரும் அதிர்ச்சி, பயம், ஆச்சரியம், நகைச்சுவை என பல்வேறு எதிர்வினைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பயனர், “இவன் பயப்படவில்லையா? இந்தப் பாம்பு ஒரே மூச்சில் மனிதனை விழுங்கும் அளவுக்கு பெரியது!” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இவ்வளவு அமைதியான மலைப்பாம்பு நம்ப முடியாத விஷயம்… நான் ஒரு சாதாரண பல்லியைப் பார்த்தாலே பயந்து போகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். “மலைப்பாம்புகளுக்கும் ஸ்பா குளியல் செய்கிறார்களா?” என்று மற்றொருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நன்றாக சுத்தம் பண்ணு… இல்லையென்றால் அது உன் மீதே கண்ணை வைக்கும்!” என்று ஒருவர் சிரிப்பூட்டும் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ, மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையிலான விசித்திரமான உறவையும், ஆபத்தான உயிரினங்களைப் பற்றி சிலர் கொண்டிருக்கும் தைரியத்தையும் வெளிக்கொணர்ந்து, சமூக வலைதள பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.