தமிழகத்தில் முதன்முறையாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் சேவையை கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வியாசர்பாடி, பல்லவன் சாலை, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளுடன் பெரும்பாக்கம் பணிமனையும் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தன. மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், கடந்த 6-ஆம் தேதி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின்சார பஸ் பணிமனை இன்று (ஆகஸ்ட் 11) முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.49.56 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த பணிமனையை திறந்து வைத்தார். அதோடு, அங்கிருந்து 55 மின்சார ஏ.சி. பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார். இவ்வாறு பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுவது அரசு போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதல்முறையாகும்.

பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மொத்தம் ரூ.233 கோடி மதிப்பில் 55 மின்சார ஏ.சி. பஸ்கள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் என மொத்தம் 135 மின்சார பஸ்களின் சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி, பசுமை போக்குவரத்தை ஊக்குவித்து, நகரப் பயணிகளுக்கு சுகாதாரமும் வசதியும் இணைந்த சேவையை வழங்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.