மதிமுக தலைமைக்கும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையிலான மோதல் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசிய ஒரு வார்த்தை, ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு சீட் ஒதுக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளனர். அதற்குப் பதில் அளித்த துரை வைகோ, “பதவி, பொறுப்பு என்பது எல்லாம் கட்சியாகப் பார்த்துப் போடும் பிச்சை” என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த ‘பிச்சை’ என்ற வார்த்தைதான் இப்போது ஈரோடு மதிமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயமரியாதை பேசும் கட்சியில் தங்களுக்குச் சுயமரியாதை இல்லை என வருத்தமடைந்த நிர்வாகிகள், தேர்தல் முடியும் வரை பொறுமை காத்துவிட்டு, தற்போது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பொறுப்புகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

“பிச்சை, சாட்டை எடுத்து அடிப்பேன் போன்ற வார்த்தைகள் கார்ப்பரேட் கம்பெனி கலாச்சாரம் போல இருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ள அவர்கள், சாதாரணத் தொண்டர்களாக மட்டுமே நீடிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

வைகோவின் கோட்டையாகக் கருதப்படும் ஈரோட்டிலேயே இப்படி ஒரு அதிரடி ராஜினாமா அரங்கேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.