ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஹார்மூஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து முடக்கி வைப்போம் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான இந்த வழித்தடத்தை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என அவர் சூளுரைத்துள்ளார்.
மேலும் அமெரிக்க ராணுவத் தளங்களை பிராந்திய நாடுகளிலிருந்து வெளியேற்றவும், தனது குடும்பத்தினர் மற்றும் ஈரானிய மக்களின் மரணத்திற்குப் பழிவாங்கவும் இந்த நடவடிக்கை தொடரும் என ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர் மோதல் மற்றும் கடல்வழித் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதனால் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புவதாகக் கூறியுள்ள மொஜ்தபா காமேனி, அதே சமயம் அமெரிக்கத் தளங்களுக்கு அனுமதி அளித்துள்ள நாடுகள் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும், மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
