உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவரின் 13 வயது மகளை, அப்பெண்ணின் லிவ்-இன்-பார்ட்னர் ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன் கணவரிடம் இருந்து பிரிந்து, தனது மகளுடன் கான்பூருக்கு வந்துள்ளார். அங்கு அஜீத் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் ஜாஜ்மௌ பகுதியில் லிவ்-இன் உறவில் வசித்து வந்துள்ளனர்.
தாயார் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றதால், அவர் இல்லாத நேரத்தில், அஜீத் சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். “நீ உன் தாயிடம் புகார் அளித்தால், உன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்” என்று மிரட்டியதால், பயம் காரணமாக சிறுமி ஒரு வருட காலமாக இந்த துயரத்தை வெளியில் சொல்ல முடியாமல் மறைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவள் அழுதுகொண்டே தாயிடம் நடந்த உண்மைகளைத் தெரிவித்துள்ளாள். மகளின் நிலை கேட்டறிந்து அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக ஜாஜ்மௌ காவல் நிலையத்திற்குச் சென்று, தனது லிவ்-இன் பார்ட்னர் அஜீத் மீது பாலியல் வன்கொடுமை (Rape) புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீஸார் சிறுமியின் மருத்துவப் பரிசோதனை மற்றும் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இதையடுத்து, குற்றவாளியான அஜீத்தை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கான்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
