ஹரியானாவைச் சேர்ந்த மோஹித் நிஜஹவன் என்பவர், மருந்தியல் துறையில் சுமார் 20 ஆண்டுகள் பிராந்திய மேலாளராகப் பணிபுரிந்து, நல்ல சம்பளம் மற்றும் உயர்பதவியில் இருந்தார்.
ஆனால், அவரது குடும்பத்தினர் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கசப்பான சம்பவங்கள், அவர் உண்ணும் உணவில் இருக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன நச்சுகளின் தீமைகளைப் புரியவைத்தன. நோயுற்ற பின் மருந்து விற்பதை விட, மக்கள் நோயின்றி வாழ நச்சு இல்லாத சுத்தமான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில், 2020-ல் தனது கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்தார்.
அதோடு ஆரம்பத்தில் கூட்டுத் தொழில் தோல்வியடைந்து, கையில் வெறும் ₹30,000 மட்டுமே இருந்த நிலையிலும் அவர் பின்வாங்கவில்லை. தனது வீட்டின் ஒரு சிறிய 100 சதுர அடி அறையில், மண் இல்லாமல் தேங்காய் நார் கழிவு , எல்.இ.டி விளக்குகள் மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி ‘வெர்டிகல் ஃபார்மிங்’ முறையில் மைக்ரோகிரீன்ஸ் இளம் முளைக்கீரை வகைகள் விவசாயத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து ஆரம்பத்தில் 2-3 விதைகளுடன் தொடங்கிய இந்த சோதனையானது, தற்போது ‘எம்பிரியோனிக் கிரீன்ஸ்’ நிறுவனத்தின் கீழ் ‘கிரீனு’ என்ற பிராண்டாக மாறி, 75-க்கும் மேற்பட்ட கீரை வகைகளை வளர்க்கும் அளவிற்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. கீரைகளை வெட்டி விற்பனை செய்தால் அவை சத்துக்களை இழந்துவிடும் என்பதால், நுகர்வோருக்கு வேர்களுடன் சேர்த்து ஃப்ரெஷ்ஷாக டெலிவரி செய்யும் தனித்துவமான உத்தியைக் கையாண்டார்.
இந்தத் தரத்தைக் கண்டு டெல்லி NCR சுற்றியுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், பிரீமியம் உணவகங்கள் இவருக்கு வாடிக்கையாளர்களாயின. இதன் மூலம், மாதம் 6,500-க்கும் மேற்பட்ட கீரை தட்டுகளை விற்பனை செய்து, மாதத்திற்கு ₹12 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி, ஆண்டுக்கு ₹1.44 கோடிக்கும் அதிகமாக டர்ன்ஓவர் செய்து சாதனை படைத்து வருகிறார்.
மேலும், விவசாயத்திற்கு ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை என்பதை நிரூபித்ததோடு, நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இந்தத் நவீன விவசாயப் பயிற்சியையும் வழங்கி முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
