மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் லட்சுமண் பிரசாத் பிரஜாபதி. இவர் கடந்த சனிக்கிழமை மாலை சிமரியா திருவிழாவைப் பார்த்துவிட்டுத் தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து மது குடிக்கப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தர முதியவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியது. அத்துடன் நில்லாமல், முதியவரின் கைகளை மஃப்ளரால் (Scarf) தங்கள் பைக்கின் பின்னால் கட்டிவிட்டு, பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். சுமார் 4 கிலோமீட்டர் தூரம் முதியவர் சாலையில் தேய்க்கப்பட்டுக் கொண்டே இழுத்துச் செல்லப்பட்டார்.

நிஜமான ‘நரக’ வேதனை: இந்தக் கொடூரத் தாக்குதலால் முதியவரின் கைகள் மற்றும் கால்களில் இருந்த தோல்கள் உரிந்து, எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்குப் படுகாயமடைந்தார். தற்போது அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

போலீஸ் அதிரடி: இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், மும்பைக்குத் தப்ப முயன்ற 4 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைதானவர்களைக் கிராமத்தின் முக்கிய வீதிகளில் போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதுபோன்ற குற்றவாளிகளுக்குச் சமூகம் பயப்படத் தேவையில்லை என்பதை உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.