ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம நபர் சர்வர் கோளாறு காரணமாக பணம் வரவில்லை. சரியான பிறகு நானே எடுத்து தருகிறேன் என பார்த்திபனிடம் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து மர்ம நபர் பார்த்திபனிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தின் உள்ளே செலுத்தி பணம் வரவில்லை என தெரிவித்தார்.

இதனால் கார்டை வாங்கிக் கொண்டு பார்த்திபன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து ஏ.டி.எம் கார்டை பார்த்தபோது அது தன்னுடைய ஏ.டி.எம் கார்டு இல்லை என்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் பணத்தை திருடிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத்(30) என்பவரை கைது செய்தனர்.