தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது.

அப்போது மக்களிடையே பேசிய விஜய், மற்ற கட்சிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் விலைமதிப்பற்ற வாக்கை மட்டும் நம்முடைய ‘விசில்’ சின்னத்திற்கு அளியுங்கள் என்று அதிரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

மக்களுக்குச் சேர வேண்டிய பணம் இது, அதை வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்றும், ஆனால் மாற்றத்தை உருவாக்க விசிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய விஜய், சென்னையின் அடையாளமான இந்தத் தொகுதியிலிருந்து தனது வெற்றியைத் தொடங்க விரும்புவதாக உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல் மற்றும் துணிச்சலான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் களம் இப்போது இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.