உலகின் முன்னணி டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா (பேஸ்புக், வாட்ஸ்அப்) ஆகிய இரண்டும் இணைந்து சுமார் 23,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக பில்லியன் கணக்கில் செலவு செய்து வருவதால், மற்ற செலவுகளைக் குறைக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதில் மெட்டா நிறுவனம் வரும் மே 20-ம் தேதி முதல் தனது 10 சதவீத ஊழியர்களை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்ய உள்ளது. அதைவிட ஆச்சரியமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 51 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ‘வாலண்டியர் பய்அவுட்’ (Voluntary Buyout) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, வயதும் பணி அனுபவமும் சேர்ந்து 70-க்கு மேல் இருக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு, ஒரு பெரும் தொகையைக் கொடுத்து அவர்களாகவே முன்வந்து வேலையை விடுமாறு அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
லே-ஆஃப் போல இல்லாமல், ஊழியர்களே பணத்தை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வெளியேற இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏஐ (AI) உள்கட்டமைப்பிற்காக பெரும் முதலீடுகளைச் செய்து வரும் இந்த நிறுவனங்கள், நிர்வாகத்தைச் சீரமைக்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருவது ஐடி துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
