கர்நாடக மாநிலத்தில் பணம் கேட்டு மருமகளைத் தவறான பாதைக்குத் தூண்டிய மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் அஞ்சனா பாய் (22) என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 11 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அஞ்சனா பாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அஞ்சனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது திருமணத்திற்குப் பிறகு அஞ்சனாவை வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

வியாபாரம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் கணவர் சேகரை, சீக்கிரம் வருமாறு அஞ்சனா கேட்டுள்ளார். இது தொடர்பாக மாமியார் அருணா பாய்க்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அஞ்சனாவிடம் அவரது மாமியார் ரூ.1 லட்சம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அஞ்சனா மறுப்பு தெரிவிக்கவே, “விபசாரத்தில் ஈடுபட்டு அந்தப் பணத்தை சம்பாதித்துக் கொடு” என்று கூறி அவரை கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஞ்சனா, தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அஞ்சனாவின் கணவர் சேகர் பாட்டீல், மாமனார் சந்திரகாந்த், மற்றும் மாமியார் அருணா பாய் ஆகிய மூவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.