உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு மொபைல் ஷோரூமில் புகுந்து போனைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைன் பஜார் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடைக்குச் சென்ற காவலர்கள் மிதிலேஷ் யாதவ் மற்றும் தனஞ்சய் பிந்த் ஆகியோர், அங்கிருந்த ஊழியர்களிடம் விலையுயர்ந்த போன்களைக் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஊழியர் போன்களைக் காட்டிக்கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் தனது பழைய போனை அங்கிருந்த புதிய போனுக்குப் பதிலாக மாற்றி வைத்துவிட்டு, லாவகமாகப் புதிய போனைத் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் ஒரு காவலர்.

​இந்தக் காரியத்தைச் செய்து முடித்ததும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கேலியாகச் சிரித்துக்கொண்டே எதுவும் நடக்காதது போலக் கடையை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் கடை உரிமையாளர் போன்களைச் சரிபார்த்தபோது ஒன்று காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிஜத் திருடர்களைப் பிடிக்க வேண்டிய போலீஸாரே இந்தத் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. உடனே எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட, திருடப்பட்ட போன் மீட்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸார் மீதும் தற்போது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “சட்டம் காப்பவர்களே இப்படிச் செய்தால் பொதுமக்கள் யாரை நம்புவார்கள்?” என அந்தப் பகுதி மக்கள் குமுறி வருகின்றனர்.