பட்டம் விடும் சீசனில் அறுந்து விழும் மாஞ்சா நூல்களைச் சேகரிக்கும் சிறுவர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் குறித்துப் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அண்மைக் காலமாக மாஞ்சா நூல் மூலம் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த முக்கியத் தகவல்கள்  வெளியாகியுள்ளது.

பொதுவாக மாஞ்சா நூல்கள் தயாரிக்கப்படும்போது, கண்ணாடித் துகள்கள் மற்றும் இரும்பு போன்ற உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மின்சாரத்தை நன்கு கடத்தக்கூடியவை.
நைலான் நூல் மின்சாரத்தைக் கடத்தாது என்றாலும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிலவும் பனிமூட்டத்தால் அந்த நூல் ஈரமடைகிறது. ஈரமான நைலான் நூல் வழியாக மின்சாரம் மிக எளிதாகப் பாயும் என்பதால், மின் கம்பிகளில் தொங்கும் நூலைத் தொடும்போது விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில் சங்காரெட்டி மாவட்டத்தில் சமீபத்தில் இரு சிறுவர்கள் இத்தகைய விபத்தில் சிக்கியுள்ளனர். அதன்படி நந்த கிஷோர் (14 ) என்ற சிறுவன், மின் கம்பியில் தொங்கிய மாஞ்சா நூலைப் பிடிக்க முயன்றபோது பலத்த தீக்காயமடைந்தார். நான்கு நாட்கள் மருத்துவமனையில் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

இதேபோன்று அபுபக்கர் (6) என்ற சிறுவன், ஜனவரி 5-ஆம் தேதி மின் கம்பியில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்தார்.
இந்த இரு சம்பவங்களிலுமே சிறுவர்கள் மின் கம்பிகளை நேரடியாகத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தொட்ட மாஞ்சா நூலே மின்சாரத்தைக் கடத்தியுள்ளது.

AWCS நிறுவனர் பிரதீப் நாயர் இது குறித்துக் கூறுகையில், “மின் கம்பிகளில் சிக்கியுள்ள பறவைகளை மீட்கும் போது, நாங்கள் மின்சார வாரியத்தின் அனுமதியோடு மின் இணைப்பைத் துண்டித்த பின்னரே பணியைத் தொடங்குவோம். எங்களுடைய தன்னார்வலர் ஒருவரே தெரியாமல் மாஞ்சா நூலைத் தொட்டு லேசான மின் அதிர்ச்சிக்குள்ளானார்.

எனவே, மின் கம்பிகளில் தொங்கும் நூல்களைத் தொடக்கூடாது எனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார். மேலும் மின் கம்பிகள் மற்றும் மரங்களில் தொங்கும் பட்டங்கள் அல்லது அறுந்து கிடக்கும் நூல்களைக் கைகளால் எடுக்க வேண்டாம் என்று குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்குங்கள். ஒரு சிறிய கவனக்குறைவு வாழ்நாள் முழுதும் தீராத துயரத்தை ஏற்படுத்திவிடும்.