சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாரி (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி (50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு காய்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை அந்த கடைக்கு ஒருவர் சென்றுள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவன் மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கௌரி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்தில் பலியான நிலையில், மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் கொலை செய்த நபரை பிடித்ததுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி திருவொற்றியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காயமடைந்த மாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் கௌரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் அவருடைய பெயர் சேகர் (52) என்பது தெரிய வந்தது. இவர் அதே பகுதியில் ரிக்ஷா ஓட்டி வரும் நிலையில் கௌரிக்கும் இவருக்கும் வாய் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் கௌரி சேகரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இதில் ஆத்திரம் அடைந்த சேகர் பழி வாங்குவதற்காக கௌரியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தடுக்க வந்ததால் அவருடைய கணவரையும் அவர் வெட்டியுள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.