தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. 16,680 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் படகு மூலமாக கூட செல்ல முடியவில்லை. மீட்பு பணியில் 9 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் 1350 பேர் ஈடுபட்டுள்ளனர். 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
9 ஹெலிகாப்டர் மூலம் 11 முறை 13,500 கிலோ உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மின் வினியோகம் சீரடையவில்லை. மின்மாற்றிகள் மின்கம்பங்கள் பழுதாகி உள்ளதால் உடனடியாக மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்கினால் வெள்ளத்தால் ஆபத்து ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு 34,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெல்லையில் 64,900 லிட்டர் பால் வினியோகம், தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 323 படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது. பெருமழை பெய்யும் என கணித்து கூறவில்லை. வானிலை மையத்தின் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கையும் நன்றாக இருக்கும். ஒரு சில இடங்களில் தான் அதிகன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. 4 மாவட்டங்களில் பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது. சென்னையையும், தென் மாவட்ட பாதிப்புகளையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. நெல்லையில் 27 எருமைகள், தென்காசியில் 3 எருமைகள் உட்பட மொத்தம் 110 கன்றுகள், 297 ஆடுகள், ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. விமானப்படை, கடற்படையினர் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி நடக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.