நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் இறுதியில் இலங்கை, மொரிசியஸ், பூட்டான், பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் ஆகிய 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 99,150 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதோடு சில மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் 2000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை 550 டாலராக இருக்க வேண்டும் எனவும், வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.