மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சாந்தி அஹிர்வார் என்ற பெண்மணி, அரசு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்காக, கிராம பஞ்சாயத்துத் தலைவரின் கணவரும் பிரதிநிதியுமான ராஜ்குமார் சாஹு என்பவரிடம் ₹10,000 பணம் கொடுத்திருந்தார். பல நாட்களாகியும் அவருக்கு வீடு கிடைக்காததால், அவர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜ்குமார் சாஹு நடுரோட்டிலேயே அப்பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தரையில் கிடந்த அப்பெண்ணின் கைகளை ஒருவர் பிடித்திருக்க, மற்றவர் தொடர்ந்து கன்னத்தில் அறைந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்துத் தலைவரின் பிரதிநிதியான ராஜ்குமார் சாஹுவின் வன்முறைக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Sarpanch representative beats a Dalit woman when she asks him to return 10k rupees given for a government housing scheme in Madhya Pradesh's Chhatarpur. #MPMews #MadhyaPradesh #FreePressMP pic.twitter.com/iVGoMhsJaa
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 23, 2025
எனினும், பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் அதிகாரிகளிடம் முறையாகப் புகார் அளித்தும், இதுவரை குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகார பலம் மற்றும் சமூக அந்தஸ்தைப் பயன்படுத்தி நடக்கும் இந்த அநீதிக்கு எதிராகப் பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
