சமீபத்தில் சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் திரண்டனர். ரயிலில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால், பாதுகாப்புக்காக ரயில் கதவுகள் மூடப்பட்டன. ஆனால், ரயிலுக்குள் செல்ல முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த பயணிகள், குறிப்பாக இளைஞர்கள் சிலர், ரயில் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சித்தனர். அவர்கள் கதவுகளை மிதித்தும், அடித்தும் உடைக்க முயன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வட இந்தியாவில் கொண்டாடப்படும் சத் பூஜையை ஒட்டி சொந்த ஊர் செல்ல ரயிலின் கதவை உடைக்க
முயன்ற பயணிகள்#Punjab #ChhathPuja pic.twitter.com/olwQMBAxmi— BBC News Tamil (@bbctamil) October 23, 2025
இந்தக் கூட்ட நெரிசல் மற்றும் அதைச் சமாளிக்க முடியாமல் பயணிகள் செய்த அத்துமீறல் ஆகியவை இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் அதிக ரயில்களை இயக்காததால் இதுபோன்ற நெரிசலும் குழப்பமும் ஏற்படுவதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், ரயிலின் கதவுகளை உடைக்க முயன்ற பயணிகளின் செயல் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் அமைந்ததாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் பாதுகாப்பற்ற பயணச் சூழலை ஏற்படுத்துவதாகவும், பயணக் கலாச்சாரத்தில் இது ஒரு மோசமான போக்கு என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
