தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மயிலார்தேவ் பள்ளியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த நவ்ஷாத் (45) என்ற கூலித் தொழிலாளி, குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கும் இவரது மனைவி காத்தூன் (38) என்பவருக்கும் ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்று உழைத்தாலும், குடும்பத்தில் செலவு அதிகரித்துக் கொண்டே வந்ததால் நவ்ஷாத் அடிக்கடி தனது மனைவியிடம் புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நன்றாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த நவ்ஷாத், கதவை உட்புறமாகப் பூட்டித் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த மனைவி மற்றும் எட்டு குழந்தைகளும் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார், நவ்ஷாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
