நிர்வாகத்தின் அலட்சியத்தால் டெல்லியில் நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள திக்ரி பகுதியில், டெல்லி குடிநீர் வாரியத்தால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம் ஒன்று தோண்டப்பட்டிருந்தது. சமீபத்திய கனமழையினால் அந்தப் பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி, குளம் போல காட்சியளித்தது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு இளைஞர், அந்தப் பள்ளத்தை கவனிக்காமல் அதனுள் தவறி விழுந்தார். ஆழமான அந்தப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்ட காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சாலையின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், முறையான எச்சரிக்கை பலகைகளோ அல்லது தடுப்புகளோ இன்றி ஆழமான பள்ளத்தைத் தோண்டி அப்படியே விட்டதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். டெல்லி குடிநீர் வாரியத்தின் இத்தகைய பொறுப்பற்ற செயலால் ஒரு விலைமதிப்பற்ற உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.