மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும்  பேருந்தில், ஒருவர் திடீரென தானாகவே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பேருந்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு புனேவிலிருந்து புசேடு நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்தவர்களில் ஒருவர், தனது பையில் இருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு, உடலில்  ஊற்றி, தானாகவே தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவரது உடல் முழுமையாக தீக்கிரையாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல், கதவுகள் வழியாக அவசரமாக வெளியே குதித்தனர். பேருந்து ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, மற்ற பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி உதவியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவரின் பெயர் சுனில் சஜ்ஜன்ராவ் டேல் (வயது 50) என்பதும், அவர் மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மெஹ்கர் தாலுகாவின் அரேகான் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும்  தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. சுனிலின் குடும்ப பின்னணி, மனநிலை, தனிப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் பயணித்து வந்துள்ளனர். தீ விபத்தில் அவர்களில்  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது  நிம்மதி அளிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.