சீனாவைச் சேர்ந்த 29 வயதான லிசா லியு என்ற இளம் பெண், தனது ஆசிரியர் பணியில் இருந்த அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக அந்த வேலையைத் துறந்துள்ளார். தற்போது அவர் ஒரு சவப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இணைந்து, யாரும் எதிர்பாராத விதமாகப் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறார்.

மேலும் சவப்பெட்டிகளைத் தயாரித்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், தனது நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 54 கோடி வரை வருமானம் ஈட்டிக் கொடுத்து “பிசினஸ் பெண்மணியாக” உருவெடுத்துள்ளார். “இது வெறும் தொழில் மட்டுமல்ல, வாழ்வாதாரம்” என்ற நோக்கில் அவர் இந்த மாற்றத்தைத் துணிச்சலாக மேற்கொண்டுள்ளார்.

இந்த வினோதமான தொழில் மாற்றம் குறித்து லிசா கூறுகையில், மற்ற தொழில்களில் லாப நஷ்டங்கள் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும், ஆனால் இந்தத் தொழிலில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் “உலகில் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் இறந்து கொண்டே இருப்பார்கள், அதனால் சவப்பெட்டிகளுக்கான தேவை என்றும் குறையாது” என்ற எதார்த்தமான அதேசமயம் அதிரடியான உண்மையை அவர் முன்வைக்கிறார். வேலைப்பளு மிகுந்த கௌரவமான பணியை விட, மனநிறைவும் அதிக வருமானமும் தரும் இந்தத் தொழில் தனக்குச் சிறந்ததாக இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.