பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரான் போர் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இதனை எதிர்கொள்ள, பஞ்சாப் மாகாணத்தில் அமைச்சர்களுக்கான அதிகாரப்பூர்வ எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலையால் கல்வித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தானில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சீராக்க பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளக் குறைப்பு, புதிய ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கார்கள் வாங்குவதற்குத் தடை போன்றவை அடங்கும். தற்போதைய சூழலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.520-ஐயும், பெட்ரோல் ரூ.458-ஐயும் கடந்து விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க இருசக்கர வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு மானியம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.