மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வரும் நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை, அமெரிக்காவின் சிறப்புப் படை வீரர் குழு சாகசமாக மீட்டெடுத்த சம்பவம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 3ம் தேதி அமெரிக்காவிற்குச் சொந்தமான எப்-15இ ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்திருந்தது. அந்த விமானத்திலிருந்து தப்பிய விமானியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அறுபதாயிரம் டாலர் வெகுமதி அளிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஈரானின் புரட்சிப் படையினரும் உள்ளூர் பழங்குடியினரும் அந்த விமானியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஜாக்ரோஸ் மலைப்பகுதியின் இடுக்கில் ஒளிந்திருந்த அவரை அமெரிக்க மீட்புக் குழுவினர் ரகசியமாக மீட்டுள்ளனர்.
அந்த விமானி தனது உடையில் அணிந்திருந்த பிரத்யேக மின்னணுச் சாதனம் வெளியிட்ட ரகசிய சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை அமெரிக்கக் குழுவினர் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். இந்தச் சிக்னலை அமெரிக்கப் படையினரைத் தவிர மற்றவர்களால் இடைமறிக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
கடந்த 2013ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை வேட்டையாடிய அதே சீல்சிக்ஸ் வீரர் குழுதான் இந்த மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் நிலப்பரப்பிற்குள் ஹெலிகாப்டரை மிகத் தாழ்வாகப் பறக்கச் செய்து, எதிரி நாட்டுப் படையினரின் கண்ணில் படாமல் அந்த விமானியைப் பத்திரமாக மீட்டெடுத்தது அமெரிக்கப் போர் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்தச் சாகச மீட்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இது ஒன்று என அவர் பெருமிதம் கொண்டுள்ளார்.
ஒருவேளை அந்த விமானி ஈரானிடம் சிக்கியிருந்தால், அவரைப் பணயக்கைதியாக வைத்து அமெரிக்காவிற்குப் பல்வேறு நெருக்கடிகளை ஈரான் கொடுத்திருக்கும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுமார் நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள தனது சொந்தப் போர் விமானத்தை ஈரானிடம் சிக்காமல் இருக்க அமெரிக்காவே அழித்த நிலையில், தற்போது அதன் விமானியையும் பத்திரமாக மீட்டிருப்பது ஈரானுக்குக் கிடைத்த ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
