வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏ-வை நாட்டின் அடுத்த தலைவராக உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 13 வயதாகும் கிம் ஜூ ஏ, அண்மைக்காலமாக வடகொரியாவின் முக்கிய ராணுவ மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தனது தந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
மேலும் அவர் ராணுவப் பயிற்சியின் போது டாங்கிகளை ஓட்டியதும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் அவர் ஒரு வாரிசாக முன்னிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகத் தென்கொரியா கூறுகிறது. வடகொரிய அரசு ஊடகங்கள் அவரை ‘மதிப்பிற்குரிய மகள்’ என்றும், உயரிய தலைவர்களுக்கு வழங்கப்படும் ‘வழிகாட்டும் மாபெரும் நபர்’ என்ற பட்டத்தையும் கொண்டு அழைப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பைக் கொண்ட வடகொரியாவில், ஒரு பெண்ணைத் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எதிர்காலத்தில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இவ்வளவு முன்னதாகவே அவர் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது வெறும் அனுமானம் அல்ல என்றும், இதற்கான நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தென் கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் வாரிசாக அவரது மகள் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, அந்நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
