அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதல் போக்கு குறித்து வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகள் வந்துள்ள போதிலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

மேலும் ஒருவேளை ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். குறிப்பாக, “வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் எண்ணெய் வளங்களை நாங்கள் கைப்பற்றுவோம், அவை நாங்கள் எடுத்துக்கொள்வதற்காகவே காத்திருக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ள கருத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், டிரம்ப் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். வளைகுடா நாடுகள் இந்தப் போரினால் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் தற்போது பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டி வந்தாலும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணியாத பட்சத்தில் அந்நாட்டின் மிக முக்கியமான எண்ணெய் வளங்களை இலக்கு வைக்க டிரம்ப் தயாராக இருப்பது அவரது பேச்சின் மூலம் தெளிவாகிறது. இந்த விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.