உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மகேக் அகமதுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோலா கிராமத்தில் உள்ள பன்சல் கோயில் அருகே இருக்கும் பிஜி விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேக்கின் சடலம் அதே கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த இளைஞரின் அறையில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அசாமின் டிப்ருகர் பகுதியைச் சேர்ந்த மகேக் அகமது, தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நோய்டாவுக்கு வந்துள்ளார். பின்னர் தனது தோழியான சஞ்சனாவுடன் பரோலா கிராமத்தில் உள்ள பிஜி விடுதியில் தங்கியிருந்தார். சஞ்சனாவும் அசாமைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆவார். மகேக் 12ஆம் வகுப்பு முடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே கட்டிடத்தில் பிகார் மாநிலம் கட்டிஹார் பகுதியைச் சேர்ந்த ரமண் என்ற இளைஞரும் தங்கியிருந்தார். அவர் பி.டெக் படித்தவர் என்றும், முன்பு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அவர் வேலை இல்லாமல் இருந்ததாக அங்கு வசித்தவர்கள் கூறியுள்ளனர். ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு மகேக்கும் சஞ்சனாவும் அறைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ரமண் தனது அறைக்கு வெளியே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி சஞ்சனா வெளியே சென்றிருந்த நிலையில், மகேக் அறையிலேயே இருந்துள்ளார். பின்னர் சஞ்சனா திரும்பி வந்தபோது மகேக் அங்கு இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ரமணின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், அங்கு வசித்தவர்கள் சந்தேகமடைந்தனர். அறைக்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் ரமண் அங்கு இல்லை.

இதையடுத்து கட்டிட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அறையின் பூட்டைத் திறந்து பார்த்தபோது, உள்ளே மகேக் அகமதுவின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது. மகேக்கின் செல்போனை கைப்பற்றியுள்ள போலீஸார், அழைப்புகள் மற்றும் உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.