மகா நகரங்களில் வானுயர்ந்த கட்டிடங்களில் வாழ்வது பலரது கனவாக இருக்கலாம். ஆனால், அந்த 16-வது மாடி வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் ஒரு கசப்பான உண்மையை இளைஞர் ஒருவர் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது தாயார் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இப்போதுதான் (பிப்ரவரி மாதம்) கீழே இறங்கி வந்துள்ளார் என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “வெயிலைப் பார்ப்பதற்குக் கூட லிஃப்ட் ஏறித்தான் கீழே வர வேண்டும் என்றால், இது வீடா இல்லை புறாக் கூடா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்த இளைஞர்.
வசதிகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று முதியவர்களை ஒரு நான்கு சுவருக்குள் முடக்கி விடுகின்றன. இயற்கை காற்று, சூரிய ஒளி மற்றும் அக்கம்பக்கத்தினர் என எதுவுமே இல்லாமல், தனிமையில் வாடும் பல முதியவர்களின் நிலையை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது. “வீடு வாங்கும் போது அதன் தோற்றத்தை மட்டும் பார்க்காதீர்கள், அங்கே காற்றோட்டமும், முதியவர்கள் எளிதாக வெளியே வந்து செல்ல சூழலும் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்” என அந்த இளைஞர் விடுத்துள்ள வேண்டுகோள் இப்போது பலரது கண்களைத் திறந்துள்ளது.
