ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத, இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் என்றும், இதில் தலையிட மற்ற நாடுகளுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சட்டப்பூர்வமான பொதுவான எல்லை எதுவும் கிடையாது என்றும், 1963-ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதியுடன் கூறியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது, “சீனா – பாகிஸ்தான் கூட்டு அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து தேவையின்றி குறிப்பிடப்பட்டுள்ளதை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானதாகவும், உறுதியானதாகவும் இருந்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்தன, இருக்கின்றன, எப்போதும் இருக்கும்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தலையிடக் கூடாது என்று இந்தியா எச்சரித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் சீனா – பாகிஸ்தான் பொருளாதார மண்டல (CPEC) திட்டத்திற்கும் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் வழியே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், இதனை இந்தியா தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தியப் பகுதியில், எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்துவதோ அல்லது அதை நியாயப்படுத்த முயல்வதோ முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய நீர்வள ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையையும் இந்தியா நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முறையான, சட்டப்பூர்வமான எல்லைகளே இல்லாதபோது, இதுபோன்ற ஒத்துழைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே போடப்பட்ட எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது. இந்தியாவின் நிலப்பரப்பைத் தன்வசம் வைத்துள்ளதாகப் பாகிஸ்தான் தவறாகக் கருதி இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.