கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆடம்பர வாழ்க்கையும், பல லட்ச ரூபாய் சம்பளமும் மன அமைதியைத் தருவதில்லை என்பதை உணர்ந்து, ரூ.300 கோடி Turnover கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியை 40 வயதில் இந்தியத் தொழிலதிபர் ஒருவர் துறந்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி குமார் என்ற அந்த தொழிலதிபர், தனக்குக் கிடைத்த சொகுசு கார், ஏசி கேபின், வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் விடுத்து, “அடுத்தவரின் பிராண்டை வளர்ப்பதை விட சொந்தமாகச் சாதிக்க வேண்டும்” என்ற நோக்கில் எடுத்த இந்த திடீர் முடிவால் அவரது குடும்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இம்முடிவால் கோபமடைந்த அவரது தாய் மூன்று நாட்கள் பேசாமலும், அவரது மனைவி அதிர்ச்சியடைந்தும் இருந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
நள்ளிரவில் அவர் வெளியிட்ட இந்த உருக்கமான வீடியோ, விடிவதற்குள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளதுடன், அவரது இன்ஸ்டாகிராம் இன்பாக்ஸும் முடங்கியது. தற்பொழுது கார்ப்பரேட் பதவிகளைத் துறந்து, 40 வயதில் ‘BadaFranchise’ என்ற சொந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் அஸ்வினி குமார், அன்று பன்னாட்டு நிறுவனத்தின் மூடிய அறைக்குள் கிடைக்காத மன நிம்மதியும், திருப்தியும் இன்று சொந்த உழைப்பில் கிடைப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வேலை தேடுபவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
