கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், அண்மையில் எஸ்.எஸ்.எல்.சி (SSLC) தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் கரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. மாணவி எப்போதும் போனும் கையுமாக இருந்ததால் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக் கொண்ட மாணவி, “நான் காதலனுடன் செல்கிறேன், என்னை யாரும் தேட வேண்டாம்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து மாயமானார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். ​இதற்கிடையே, காதலனைப் பார்க்க அந்த மாணவி பஸ்சில் கரூர் நோக்கிச் சென்றுள்ளார். ஆனால், அந்த பஸ் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சென்றபோது திடீரென பழுதானது. பயணிகள் அனைவரும் வேறு பஸ்சிற்கு மாற்றப்பட்டனர்.

இந்தத் திடீர் தடையால் பயந்துபோன மாணவி, தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் கோவைக்கே பஸ் ஏறியுள்ளார். சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்த அவரது செல்போன் ஆன் ஆனதை வைத்துப் பின்தொடர்ந்த போலீசார், சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். பின்னர் அவருக்குப் புத்திமதி கூறி பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பஸ் பழுதானதால் ஒரு சிறுமியின் வாழ்க்கை தப்பியது அப்பகுதியில் விவாதமாகியுள்ளது.