கேரளாவில் புதிய ஆட்சி அமைந்த ஒரே வாரத்தில், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். கடந்த பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், அவரது மகள் வீணா விஜயனின் எக்ஸாலஜிக் நிறுவனத்திற்குச் கொச்சி மினரல்ஸ் அண்ட் ருடைல் லிமிடெட் (CMRL) நிறுவனம் ₹1.72 கோடி முறைகேடாகப் பணம் வழங்கியதாகப் பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த மெகா ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே முன்னாள் முதலமைச்சரைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த அதிரடி சோதனை, அம்மாநில மற்றும் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
