புதுச்சேரி காவல்துறையின் கிழக்கு மண்டல எஸ்பியாகப் பணியாற்றி வரும் 30 வயது இளம் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், உறுதி மற்றும் துணிச்சலின் சின்னமாக தற்போது பேசப்பட்டு வருகிறார். வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய இவர், 26-வது வயதிலேயே குடிமை பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் பதவி பெற்றது குறிப்பிடத்தக்கது.
1995-ல் மும்பையில் பிறந்த இஷாவின் தந்தை யோகேஷ் பிரதாப் சிங் ஐபிஎஸ் (1985 பேட்ச்). நேர்மைக்கு பெயர்பெற்ற அவர், தொடர்ச்சியான பணியிட மாற்றங்கள் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்து முழுநேர வழக்கறிஞராக மாறியவர். அதிகாரத்தின் தவறான பயன்பாட்டைத் தவிர்த்து, காரில் கூட சிவப்பு விளக்கை பயன்படுத்தாதவர் என்பதும் அவரது நேர்மையின் எடுத்துக்காட்டாகும். தந்தையின் நேர்மை, தாயின் சமூக அக்கறை—இவை இரண்டின் தாக்கத்தினாலும் இஷா சிங் சிறுவயதிலிருந்தே துணிவு மற்றும் மனிதநேயத்துடன் வளர்ந்தார்.
பெங்களூரு தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் 2018-ல் சட்டம் பட்டம் பெற்ற இஷா, அதன் பின்னர் பொதுநல வழக்குகளில் ஈடுபட்ட வழக்கறிஞராக பணியாற்றினார். செப்டிக் டேங்க் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத்தந்தது, தவறான குற்றச்சாட்டில் சிறைப்பட்ட பெண்ணுக்கு பிணை பெற்றுத்தந்தது உள்ளிட்டவை அவரது வழக்கறிஞர் காலத்தின் முக்கிய சாதனைகள்.
பின்னர், தந்தையின் பாதையில் குடிமைப்பணியைத் தேர்வு செய்ய முடிவு செய்த இஷா, 2021-ம் ஆண்டுக்கான UPSC தேர்வில் வெற்றி பெற்று AGMUT காடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். டெல்லி, அருணாசலப் பிரதேசம், அந்தமான்–நிக்கோபார் உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் கவனிக்கத்தக்க பணிகளை செய்து பாராட்டைப் பெற்றார்.
2024-ல் புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள், கூட்ட நெரிசல் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்தார். சட்ட மீறலுக்கு ‘பூஜ்ய சகிப்புத் தன்மை’ கொள்கையைப் பின்பற்றும் இவரின் உறுதியான நடவடிக்கைகள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளன. பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்ற கட்டுப்பாடு ஆகியவற்றிலும் அவர் முன்னோடியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கான பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்ட போது, கட்சி பொதுச் செயலாளர் ஆனந்திடம் அவர் அளித்த எச்சரிக்கை பேசுபொருளாகி, அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. கரூர் சம்பவத்திற்குப் பின் விஜயின் சாலை வலம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதும் இஷாவே என கூறப்படுகிறது.
புதுச்சேரி காவல்துறையினர் மத்தியில் “இஷா சிங் எதற்கும் அஞ்சாதவர்; இரவு நேர குற்றச்சம்பவங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்பவர்” என்ற பாராட்டுக்கள் ஒலிக்கின்றன. “நீ எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டம் உன் மேல் தான்” என்ற வாசகத்தை தன் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இஷா சிங், இன்றைய தலைமுறைக்கே ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
