உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற நெல்லை அல்வாவின் விலையானது தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்வா தயாரிப்பதற்கு முக்கியத் தேவையான சர்க்கரை, நெய், டால்டா மற்றும் பிற மூலப்பொருட்களின் கொள்முதல் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, திருநெல்வேலி நகரில் உள்ள முன்னணி மற்றும் பாரம்பரியமான முக்கியக் கடைகளில் இதுவரை ஒரு கிலோ 320 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுவையான அல்வா, தற்போது அதிரடியாக 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி இந்த விலை உயர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவில் கரையும் சுவைக்காக எப்பேர்ப்பட்ட விலையும் கொடுத்து வாங்கும் நெல்லை அல்வா பிரியர்களுக்கு இந்த திடீர் விலை ஏற்றமானது சிறிய ஏமாற்றத்தை அளித்தாலும், உலகப் புகழ்பெற்ற இந்தத் தின்பண்டத்தின் மீதுள்ள மவுசு கொஞ்சமும் குறையவில்லை. விலை சற்று உயர்ந்தாலும், தரமான நெய் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரிஜினல் நெல்லை அல்வாவை வாங்குவதற்காகக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் எப்போதும்போல அலைமோதிக் கொண்டுதான் இருக்கிறது.