ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த நாள் முதலே சுவாச கோளாறு போன்ற பல பிரச்சனைகள் குழந்தைக்கு இருந்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் இறந்த குழந்தையின் சடலத்தோடு நேற்று தம்பதி ஸ்கூட்டரில் தங்களுடைய கிராமத்திற்கு 120 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளனர்.

இவர்கள் பாடேரு என்ற பகுதிக்கு அருகில் சென்ற போது ஆம்புலன்ஸ் வந்து குழந்தையின் உடலை ஏற்றி சென்றுள்ளது. இதுகுறித்து தம்பதியினர் கூறும்போது ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்காததால் குழந்தையின் உடலை ஸ்கூட்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்ததாகவும் ஆனால் அதற்குள் தம்பதியினர் அங்கிருந்து சொல்லாமல் ஸ்கூட்டரில் கிளம்பி சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் சடலத்துடன் ஒரு தம்பதி வெளியே வர முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.