இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2021-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கிய நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் 843 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு போட்டியாக மற்ற விமான நிறுவனங்களும் புதிய விமானங்களை வாங்குவதற்கு போட்டியிடுகிறது.

இது தொடர்பாக சிஏபிஏ இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அடுத்த 2 வருடங்களில் இந்திய விமான நிறுவனங்கள் 1000 முதல் 1200 விமானங்களை வாங்கும் என்று கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனம் 300 விமானங்களை கொரோனாவுக்கு முன்பாக வாங்க ஆர்டர் கொடுத்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அதில் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. இந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஆகாசா ஏர், விஸ்தாரா ஆகிய நிறுவனங்களும் புதிய விமானங்களை ஆர்டர் செய்யும் என்று கூறப்படுகிறது. கடந்த 2022 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இரு நிறுவனங்கள் 12669 விமான ஆர்டர்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளது.